தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கோயில்மாதிமங்கலம் அருகே பருவதமலை அடிவாரத்தில் கரைகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாத பிறப்பு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
மார்கழி மாதம் பிறப்பு நாளன்று, பருவதமலையை கிரிவலம் வந்து சுவாமி அருள்பாலிப்பார். அதேபோல், பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவார்கள். இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிகளை கூறி, கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சரவணன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசு வழிகாட்டி நெறிமுறைகளின் படி மார்கழி மாத பிறப்பு திருவிழாவில் கரைகண்டீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மார்கழி மாத பிறப்பு நாளில் பருவதமலை மீது ஏறி சென்று மல்லிகார்ஜுனர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பருவதமலையை கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதித்தும், மேலும் கிரிவலப் பாதையில் சுவாமிகள் பவனி வரவும் தடை விதிப்பது என முடிவானது. கோயில் உள் பிரகாரத்தில் சுவாமி பவனி வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
கரைகண்டீஸ்வரர் கோயில் மற்றும் பருவதமலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளவும், மின் தடை ஏற்படாமல் மின்சாரத் துறையினர் கண்காணிக்க வலியுறுத்தப்பட்டது.
4,560 அடி உயரம் உள்ள பருதவமலையில் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வலியுறுத்தப்பட்டது.
மேலும் பருவதமலையில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதில், கோயில் செயல் அலுவலர் சிவாஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago