நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 2021-22-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை, முனைவர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் மற்றும் அடிப்படை அறிவியல் ஆகிய துறைகளில் உள்ள 84 முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு இடங்களுக்காக நடைபெற்றது.
இதில், சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்த 110 மாணவர்களில், 80 பேர் நேற்று முன்தினம் (டிச. 9) நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். நுழைவுத் தேர்வின் முடிவு, தேர்வு நடைபெற்ற நாளிலேயே பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலோடு வெளியிடப்பட்டது.
நேற்று (டிச. 10) தரவரிசைக்கு ஏற்ப மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு வாயிலாக முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன.
மேலும், மாணவர்களின் தரவரிசை மற்றும் விருப்பத்துக்கிணங்க கல்லூரி இடத்தேர்வுகள் நடைபெற்றன.
சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.சுகுமார், தற்காலிக சேர்க்கை ஆணையை வழங்கினார். இந்நிகழ்வில், முதுநிலை மாணவர் சேர்க்கைக் குழு தலைவர் பா.ஜவஹர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago