இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டும் பணி : மூன்று அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

திண்டுக்கல் அருகே மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செஞ்சிமஸ்தான் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது: இலங்கைத் தமிழர் களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் 120 நாட்களில் முடிக்கப்படும் என்றார். அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தர முதல்வர் முயற்சி மேற்கொண்டுள்ளார், என்றார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், மாவட்டத்தில், முதற்கட்டமாக தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய மூன்று முகாம்களை ஒருங்கிணைத்து, தோட்டனூத்தில் ரூ.17.17 கோடியில் 321 வீடுகள் கட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் வக்பு வாரிய முதன்மைச் செயல் அலுவலர் பரிதாபானு, கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE