வேடசந்தூர் சிறுமி கொலையில் இளைஞர் விடுதலை உறுதி : மேல்முறையீடு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

வேடசந்தூரில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான இளைஞரை விடுதலை செய்து திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குரும்பபட்டியில் 13 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த கிருபானந்தம் (19) என்பவரை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரித்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கிருபானந்தத்தை விடுதலை செய்து 20.9.2020-ல் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதி மன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

இதையடுத்து கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, கிருபானந் தத்துக்கு தண்டனை வழங்கக் கோரி, வடமதுரை காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப் பட்டது.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கிருபானந்தம் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஆடைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனை சந்தேகத்துக்குரியதாக உள்ளது. நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிருபானந்தத்தை வீட்டில் இறக்கி விட்டவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படாதது என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இந்த சந்தேகத்தின் பலன் அடிப்படையில் கிருபானந்தத்தை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது. மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE