பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 29-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் செ.வேலுசாமி வரவேற்றார்.

பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி தலைமை வகித்து பேசும்போது, ‘‘ கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவை தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். தமிழக அரசின் உயர்கல்வித் துறை மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

இப்பல்கலைக்கழகம் சார்பில் இவ்வாண்டு கல்வி உதவித்தொகையாக 1,877 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவின் கீழ் ரூ.1.5 கோடி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும், 21 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், இவ்வாண்டில் தரவரிசையில் தகுதி பெற்ற 88 பேருக்கு தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றையும் வழங்கி, அமைச்சர் பேசியது:

இங்கு பயின்ற முன்னாள் மாணவிகள் பலர் உலகில் பல நாடுகளில் சிறந்த நிறுவனங்களில் உயரிய முதன்மை பொறுப்புகளில் பணியாற்றுவதை நான் அறிவேன்.

தற்போது பட்டம் பெறும் மாணவிகள் எங்கு சென்றாலும் பெரியார் ஏந்திய பகுத்தறிவுச்சுடரை கொண்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையை செம்மையாக்குவதுடன், சமூக மேம்பாட்டுக்கும் கடமையாற்ற வேண்டும் என்றார்.

விழாவில், இணைவேந்தர் அ.ராஜசேகரன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், பதிவாளர் பி.கே.வித்யா, பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்