மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் - ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மனித உரிமை மீறல் புகார் :

By செய்திப்பிரிவு

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தங்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் தனலெட்சுமி தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலக கண்காணிப்பாளரிடம் அவர்கள் அளித்த மனு விவரம்: மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும். இந்த வேளையில் தூத்துக்குடியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது ஆலை எதிர்ப்பாளர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

கடந்த 23.04.2021 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆதரவாக குரல் கொடுத்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். மேலும் மிகவும் அவதூறான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் நாங்கள் மிகவும் மன வேதனை அடைந்தோம்.

அதுபோல துளசி அறக்கட்டளை இயக்குநர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த போது 50 பேர் ஒன்றுகூடி அவரை தாக்க முற்பட்டார்கள். இது அரசியலமைப்பு சட்டம் அளித் துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைக்கு எதிரான சட்ட விரோத செயலாகும்.

தொடர்ந்து கடந்த நவம்பர் 6-ம் தேதி தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி, இழிவுபடுத்தி பேசினார்கள். இதில் சிலர் ரத்தகாயம் அடைந்தார்கள். இவ்வாறு தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் மீது எதிர்ப்பாளர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்