திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில், கட்டணம் வசூலிக்காமல் மாற்றுத்திறனாளி மணமகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங் களில், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால், திருமணத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படாது என கடந்த 04-09-21-ம் தேதி இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதையடுத்து, இந்த திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், மாற்றுத்திறனாளிக்கு கட்டணம் வசூலிக்காமல் திருமணம் செய்து வைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திம்மசமுத்திரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான டி.ஆர்.சித்ராவுக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆர்.ரவிச் சந்திரனுக்கும் மணமகனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அவர்களிடம் கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்காமல், திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், உதவி ஆணையர்கள் த.ராஜேந்திரன், ஆ.சந்திரசேகரன், திருமண பதிவு எழுத்தர் கோ.கலையரசி மற்றும் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர், மணமக்களுக்கு கோயில் சார்பில் வேட்டி, சேலை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago