நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான - திருப்பூர் மாவட்ட வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு : குளறுபடிகள் களையப்படவில்லை என அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், உரிய நேரத்துக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குளறுபடி மற்றும் தவறுகள் நிறைந்துள்ளதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்நடைபெறுவதை ஒட்டி, திருப்பூர்மாவட்டத்தில் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் நேற்று வெளியிட்டார்.

10.98 லட்சம் வாக்காளர்கள்

திருப்பூர் மாநகராட்சியில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 353 ஆண், 3 லட்சத்து 50 ஆயிரத்து 247 பெண், இதர வகுப்பினர் 170 என 7 லட்சத்து 12 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர்.

உடுமலை, காங்கயம், பல்லடம், தாராபுரம், வெள்ளகோவில் ஆகிய 5 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 241 ஆண், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 591 பெண், இதர வகுப்பினர் 20 என 2 லட்சத்து 17 ஆயிரத்து 852 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல, 14 பேரூராட்சிகளில் 81 ஆயிரத்து 917 ஆண், 86ஆயிரத்து 311 பெண், இதர வகுப்பினர் 7 என ஒரு லட்சத்து68 ஆயிரத்து 235 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 511 ஆண், 5 லட்சத்து 49 ஆயிரத்து149 பெண், இதர வகுப்பினர் 197 என 10 லட்சத்து 98 ஆயிரத்து857 வாக்காளர்கள் உள்ளனர்.

கருத்து கேட்கவில்லை

இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கூறும்போது, "காலை 10.30 மணி அளவில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே பட்டியலைவெளியிட்டு ஆட்சியர் சென்று விட்டார்.

மேலும், வாக்காளர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்வேறு குளறுபடிகளை சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால், அரசியல் கட்சியினரின் கருத்தை கேட்காமல் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உரிய ஆவணங்கள் எதுவும் தரப்படவில்லை" என்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.ரவி கூறும்போது, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பல்வேறு தவறுகள் உள்ளன. அதனை சுட்டிக்காட்ட விரும்பினோம். ஆனால், கூட்டத்தை முன்னரே ஆரம்பித்து முடித்துவிட்டதால், கருத்துகளை பகிர முடியாமல் போனது. ஒவ்வொரு முறையும்வாக்காளர் பட்டியல் திருத்தப்படாமல், குளறுபடிகள் மற்றும் தவறுகள்நிறைந்ததாகவே உள்ளது.

அதாவது மாநகரில் கணவருக்குபூத் எண் 90-லும், மனைவிக்கு 131-லும் வாக்குகள் உள்ளன.

அதேபோல ஒரே வீட்டில் குடியிருக்கும் தம்பதிக்கு 31-வது வார்டில் கணவருக்கும், 32-வது வார்டில் மனைவிக்கும் வாக்குகள் உள்ளன.

இது போன்று ஒரு வார்டில் ஆயிரக்கணக்கான வாக்குகளில் குளறுபடிகள் நீடிக்கின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 31 சதவீதம் வாக்குகள் பதிவாகாதநிலையில், தற்போதைய குளறுபடிகளால் பலரும் வாக்களிக்க இயலாத சூழல் ஏற்படும். வாக்காளர் இறுதி பட்டியல் தொடர்பாக, அனைத்து கட்சியினரையும் அழைத்து உரிய நேரம் ஒதுக்கி அரசியல் கட்சியினரின் கருத்தை கேட்டு, வாக்காளர் பட்டியல் தவறுகளை ஆட்சியர் சரி செய்ய வேண்டும்" என்றார்.

மனு அளித்தால் நடவடிக்கை

மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (தேர்தல்) சுந்தரம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "தவறுகள் இருப்பதாக அரசியல் கட்சியினர் சுட்டிக்காட்டினர். கோரிக்கை மனுக்கள் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்