தருமபுரி மாவட்டத்தில் - நகர்ப்புற உள்ளாட்சிகளில் 1.74 லட்சம் வாக்காளர்கள் :

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் மொத்தம் 1.74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர இருப்பதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது ஆட்சியர் திவ்யதர்சினி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

தருமபுரி நகராட்சி பகுதியில் 47 ஆயிரத்து 955 வாக்காளர்களும், அரூர் பேரூராட்சியில் 23 ஆயிரத்து 47 வாக்காளர்களும், கடத்தூரில் 9,385 வாக்காளர்களும், காரிமங்கலத்தில் 11 ஆயிரத்து 135 வாக்காளர்களும், பாலக்கோட்டில் 17 ஆயிரத்து 436 வாக்காளர்களும், பாப்பாரப்பட்டியில் 10 ஆயிரத்து 589 வாக்காளர்களும், பாப்பிரெட்டிபட்டியில் 8,456 வாக்காளர்களும், பென்னாகரத்தில் 14 ஆயிரத்து 544 வாக்காளர்களும், மாரண்ட அள்ளியில் 10 ஆயிரத்து 218 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், கம்பைநல்லூரில் 10 ஆயிரத்து 262 வாக்காளர்களும், பி.மல்லாபுரத்தில் 11 ஆயிரத்து 134 வாக்காளர்களும் என 1 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர்.

தருமபுரி நகராட்சி பகுதியில் 13 மற்றும் 10 பேரூராட்சி பகுதிகளில் 14 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 230 வாக்குச் சாவடிகளிலும் தேர்தலின்போது கண்காணிப்புக் கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி நகராட்சி ஆணையர் சித்ரா, ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்(உள்ளாட்சித் தேர்தல்கள்) மாரிமுத்துராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்கள்) ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

இதேபோல, கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயச்சந்திர பானுரெட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

ஓசூர் மாநகராட்சியில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 292 வாக்காளர்கள், கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 55 ஆயிரத்து 431 வாக்காளர்கள், 6 பேரூராட்சிகளில் 85 ஆயிரத்து 360 வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 58 ஆயிரத்து 83 வாக்காளர்கள் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE