காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல் கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இந்த வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் பா.நாராயணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். உள்ளாட்சி தேர்தல் பிரிவு வட்டாட்சியர் தினகரன் உட்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் மொத்தம் 287 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த வாக்குச் சாவடிகளில் 1,33,124 ஆண், 1,42,691 பெண், 32 இதரர் என மொத்தம் 2,75,847 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்படும். சுமார் 1,300 அலுவலர்கள் வாக்குப் பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி வெளியிட்டார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆனந்தன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,26,700 ஆண், 1,31,147 பெண், இதரர் 22 பேர் என மொத்தம் 2,57,869 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 177 வார்டுகளும், 302 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை நேற்று ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) வி.சுதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) எஸ்.கண்ணன், நகராட்சி ஆணையர்கள் (திருத்தணி) ராம ஜெயம், (பூவிருந்தவல்லி) நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இம்மாவட்டத்தில் 745 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 3,28,342 ஆண், 3,37,085 பெண், 128 மூன்றாம் பாலித்தவர் என மொத்தம் 6,65,555 வாக்காளர்கள் உள்ளனர். முதல் கட்டமாக 5 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் முதல் கட்ட நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி மாநகராட்சிகளுக்கு 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மட்டும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago