குமரி இளைஞர் தற்கொலை வழக்கை - சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி :

தோவாளை புதூரைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூரைச் சேர்ந்த எஸ்.சுமன் ஆனந்த், உயர் நீதிமன்றகிளையில் தாக்கல் செய்த மனு: என்சகோதரர் சுரேஷ்குமார் (27), பெயின்டராக வேலை பார்த்தார். இவர் ஆரல்வாய்மொழி கல்லூரியில் படித்தபோது, வேறு பிரிவைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். அப்பெண்ணுக்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். நாங்கள் சுரேஷ்குமாருக்கு அப்பெண்ணை திருமணம் செய்து தருமாறு கேட்டதற்கு மறுத்து விட்டனர்.

இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு எதிராக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இப்புகார் தொடர்பாக 7.11.2021-ல் விசாரணைக்காக பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு செல்வதாகக் கூறிமோட்டார் சைக்கிளில் சுரேஷ்குமார் சென்றார். அவர் காவல் நிலையம் செல்லவில்லை. காட்டுப்புதூரில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

சுரேஷ்குமாரை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், போலீஸார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, சுரேஷ்குமார் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யவும், எங்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும், பூதப்பாண்டி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கைசிபிஐ விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறுமனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் சுரேஷ்குமார் மருந்து கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்குவது, இறந்து கிடந்த இடத்துக்கு நடந்து செல்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, சுரேஷ்குமார் இறப்பு வழக்கின் விசாரணை சரியாக நடைபெற்று வருகிறது. அவரை தற்கொலைக்கு யாராவது தூண்டினார்களா? என்பது விசாரணையின்போது தான் தெரிய வரும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

இறந்து கிடந்த இடத்துக்கு நடந்து செல்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE