ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ மீதான வழக்கு ரத்து :

உரிய அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டு வைத்ததாக ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

புதியம்புத்தூரில் 14.6.2015-ல் அனுமதியில்லாமல் பிளக்ஸ் போர்டு வைத்ததாக என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் வைத்திருந்த பிளக்ஸ் மற்றும் போஸ்டரில் ஆட்சேபத்துக்குரிய கருத்து எதுவும் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்ததாக கூறியுள்ளனர். தனியார் திருமண மண்டபத்தில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதற்காக அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பது குறித்து மண்டபத்தின் உரிமையாளரிடம் விசாரிக்க வில்லை.

வாக்குமூலம் பதிவு செய்யவில்லை. எனவே, இந்த வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE