தூத்துக்குடி அருகே பதுக்கி வைத்திருந்த - 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல், 3 பேர் கைது :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவின் தூத்துக்குடி வனச்சரகர் ரகுவரன் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் சிலுவைப்பட்டி கடற்கரையில்ரோந்து பணியை முடித்து விட்டு நேற்றுஅதிகாலை 1.30 மணியளவில் மாப்பிளையூரணியில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கோமஸ்புரம் இசக்கியம்மன் கோயில் அருகே உள்ள தனியார்நிறுவனத்தில் சிலர் சந்தேகமான வகையில் நடமாடுவதை கண்டனர்.

மேலும், அப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வனத்துறையினர் உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதப்படுத்தப்பட்ட நிலையிலும், வேகவைக்கப்பட்ட நிலையிலும் பிளாஸ்டிக் கேன்களில் கடல் அட்டைகள் இருந்தன. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலும் கடல் அட்டைகள் இருந்தன.

மொத்தம் 750 கிலோ கடல் அட்டைகளையும், அதனை கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், கார், கேஸ் அடுப்புகள்,சிலிண்டர்கள், அண்டாக்கள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அங்கிருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மேலவயலை சேர்ந்த கே.செந்தில்குமார் (48), தொண்டியை சேர்ந்த ஏ.சாதிக் பாட்சா (37), தூத்துக்குடி தாய்நகரை சேர்ந்த நந்தகுமார் (21) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறையினர் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்