நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு - தூத்துக்குடி மாவட்டத்தில் 6,17,104 பேர் வாக்களிக்க தகுதி :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்டார். அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி

இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சிக்கான வாக்காளர் பட்டியலை ஆணையர் தி.சாரு வெளியிட்டார். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் 1,57,763 ஆண்கள், 1,64,570 பெண்கள், 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,22,388 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகராட்சிகள்

கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 39,336 ஆண்கள், 40,742 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 80,096 வாக்காளர்கள் உள்ளனர். 85 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகளில் 17,808 ஆண்கள், 18,327பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 36,136 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சிகள்

மாவட்டத்தில் ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், எட்டயபுரம், கழுகுமலை, நாசரேத், சாத்தான்குளம், சாயர்புரம், வைகுண்டம், உடன்குடி, விளாத்திகுளம், ஆழ்வார்திருநகரி, கடம்பூர், கயத்தாறு, புதூர், கானம், பெருங்குளம், தென்திருப்பேரை ஆகிய 18 பேரூராட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. திருச்செந்தூர் பேரூராட்சிநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. இதனால் அங்கு தேர்தல் இப்போது நடைபெறவில்லை. 18 பேரூராட்சிகளிலும் மொத்தமுள்ள 273 வார்டுகளில் 86,648 ஆண்கள், 91,824 பெண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,78,484 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 286 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளில் சேர்த்து மொத்தமுள்ள 387 வார்டுகளில் 3,01,555 ஆண்கள், 3,15,463 பெண்கள், 86 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6,17,104 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 730 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில்ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஆறுமுகக்கனி (தேர்தல்), மைக்கேல் (வளர்ச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்