15 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு - தூத்துக்குடியில் தொற்று நோய் பரவும் அபாயம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் 15 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரசீர்கேடு உருவாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 25-ம்தேதி பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர்சூழ்ந்தது. தொடர்ந்து, அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் அறவே மழை இல்லை. மாறாக வெயில் கொளுத்தி வருகிறது.

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 430 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி நகரில் பெரும்பாலான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது. முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அய்யாச்சாமி காலனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது.

அதேநேரத்தில் மாநகர் முழுவதும் தெருக்களில் ஆங்காங்கே தாழ்வான பகுதிகள், பள்ளங்கள், குழிகள் மற்றும் காலிமனைகளில் தேங்கியுள்ள மழைநீர் பாசிபடர்ந்து, குப்பை கூழங்கள் சேர்ந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி டிஎம்பி காலனி 5-வது தெருவில் அருகேயுள்ள மையவாடி பகுதியில் இருந்து வடிந்த மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து பெரும் சுகாதார சீர்கேடாக மாறியுள்ளது.

இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் ஆங்காங்கே தூவப்பட்ட போதும் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தேங்கியுள்ள தண்ணீர் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்