‘மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அவசியம்’ :

By செய்திப்பிரிவு

அதிக மழைப்பொழிவு இருக்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அவசியம் என்று, இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனத்தில், உத்தரப்பிரதேசம்‌, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், தமிழகம், சத்தீஸ்கர்‌, மிசோரம்‌ ஆகிய மாநிலங்களைச்‌ சேர்ந்த 45 உதவி வனப்பாதுகாவலர்களுக்கு ‘வனப்பகுதிகளில் நீர்ப்பிரி முகடுப்பகுதி மேலாண்மை’ என்ற தலைப்பில் 12 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதில், மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு, கசிவுநீர் கட்டமைப்புகளுக்கு இடம் தேர்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், செய்முறை விளக்கம்,களப்பயிற்சி மற்றும் அதன் செலவுகளை மதிப்பீடு செய்தல், திட்ட அறிக்கை தயார் செய்தல்குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி முகாம், இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனத்தில் தொடங்கியது. நிறுவனத்தலைவர் (பொ) கே.கண்ணன் தலைமை வகித்தார்.

முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் பேசும்போது, "நீர்ப்பிரி முகடுப்பகுதி மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி அளிப்பதே முக்கிய நோக்கம். அதிக மழை பெய்தாலும், அவற்றை சேகரிக்கும் கட்டமைப்புகள் இல்லை. சமீப காலமாக மனித - விலங்கு மோதல், காட்டு தீஉள்ளிட்டவை அதிகமாக நிகழ்கின்றன. இதற்கு நீர் பாதுகாப்பு அவசியம். இப்பயிற்சியில்‌ கலந்துகொள்ளும்‌ உதவி வனப்‌ பாதுகாவலர்கள்‌, நஞ்சநாடு கிராமத்தில்‌ உள்ள நீர்ப்பிரி முகடுப் பகுதியில்‌ களப்பயிற்சியை மேற் கொண்டு, நீர்ப்பிரி முகடுப்பகுதி மேம்பாட்டுக்கான மாதிரி திட்ட அறிக்கையை தயார்‌ செய்ய உள்ளனர்" என்றார்.

சிறப்பு விருந்தினர்களாக குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் எஸ்.சிவகுமார், கோவை வனக்கல்லூரி பேராசிரியர் சி.வித்யாசாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன விஞ்ஞானி வி.கஸ்தூரி திலகம் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்