அருப்புக்கோட்டையில் உரக்கிடங்கு திறப்பு : காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் ரூ.4 கோடி செலவில் கட்டப்பட்ட உரக்கிடங்கை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அருப்புக்கோட்டை வட்டம், சுக்கிலநத்தம் சாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் கசடு கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி செலவில் உரக்கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இதை சென்னையிலிருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதே நேரம் உரக்கிடங்கில் நடந்த நிகழ்ச்சியில், விருது நகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி குத்துவிளக்கேற்றினார். பின்னர் மரக்கன்று களை நட்டார். அப்போது அவர் கூறியதாவது: இந்நகராட்சியில் 36 வார்டுகள் அமைந்துள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 87,722 பேர் வசிக்கின்றனர். நகராட்சிக்கு சொந்தமான சுக்கிலநத்தத்தில் 5,150 ச.மீ. பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ள உரக்கிடங்கில் கழிவுநீர் கசடு அகற்றும் மேலாண்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து அகற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று கூறினார்.

வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவபிரகாசம் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்