சிவகங்கை அருகே கண்மாய் தண்ணீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஷட்டர்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பெரியாறு பாசன 48-வது மடை கால்வாய் மூலம் நாமனூர் கண்மாய் நிரம்பியதும், அங்கிருந்து அலவாக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த மழையாலும், 48-வது மடை கால்வாயில் பெரியாறு நீர் வந்த தாலும், நாமனூர் கண்மாய் மறுகால் பாய்ந்து ஷட்டர்கள் திறக்காமலேயே உபரிநீர் அலவாக்கோட்டை கண்மாய்க்கு சென்றது.
தற்போது நாமனூர் கண்மாய்க்கு வந்த பெரியாறு நீர் நிறுத்தப்பட்டது. மேலும் மழையும் நின்றது. இதனால் அலவாக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீர் செல்வது நின்றது. அலவாக்கோட்டை முழுமையாக நிரம்பினால்தான் சிங்கினிப்பட்டி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். எனவே அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நாமனூர் க-ண்மாயில் இருந்து அலவாக் கோட்டை கண்மாய்க்கு செல்லும் ஷட்டர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்தனர். அதிகாரிகள் சென்றதும், ஷட்டர்களை நாமனூர் விவசாயிகள் அடைத்தனர். ஷட்டர்களை அடைத்தது குறித்து அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, பெங்குடி கிராம மக்கள் மதகுபடி போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று கண்மாய் ஷட்டர்களை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், பெரியாறு நீர் வந்தால் மட்டுமே திறக்க வேண்டுமெனவும் கூறி நாமனூர் விவசாயிகள் ஷட்டர்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அலவாக்கோட்டை கிராம மக்கள் தங்களது கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி சிவகங்கை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து இருதரப்பினரிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago