தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு - சக்கர நாற்காலி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

தி.மலையில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஆட்சியர் பா.முரு கேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன் னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, “வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தகுதியான நபர்களை பங்கேற்க செய்ய வேண்டும். முகாம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். முகாமுக்கு வருபவர்களுக்கு கரோனா தடுப்பு சோதனை மேற்கொள்ள வேண்டும். தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட உரிய உபகரணங்கள், அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுடன் மருத்துவ குழுவினர் மற்றும் 108 ஆம்புலனஸ் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்சாரம் துண்டிப்பு இருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கல்லூரியில் உள்ள வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேநீர் மற்றும் உணவு பொருட்கள் விற்பனைக் கூடம் அமைத்து கொடுக்க வேண்டும். இணையதள வசதியுடன் கூடிய உதவி மையங்கள் அமைக்க வேண்டும்” என்றார்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், கூடுதல் ஆட்சியர் பிரதாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்