மேட்டூர் அணை நீர்வரத்து 16,400 கனஅடியாக சரிவு : 16 கண் மதகு மூடப்பட்டு உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 16,400 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் 16 கண் மதகு மூடப்பட்டது.

வட கிழக்குப் பருவமழை காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை கடந்த 13-ம் தேதி நிரம்பிவிட்டது. இதன் பின்னர் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 25,400 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில், 22 ஆயிரம் கனஅடி நீர், அணையில் உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாகவும், அணையில் மூடப்பட்டிருந்த 16 கண் மதகு திறக்கப்பட்டு, அதன் வழியாக, விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. அணை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 20,400 கனஅடியாக குறைந்தது. எனவே, உபரி நீர் வெளியேற்றப்படும் 16 கண் மதகு நேற்று மீண்டும் மூடப்பட்டது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரில் 20 ஆயிரம் கனஅடி நீர், அணையின் நீர் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 16,400 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து அணை மின்நிலையங்கள் வழியாக 16 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்