வெளிமாவட்ட வியாபாரிகள் வருகையால், ஈரோடு ஜவுளிச்சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் செயல்படும் கனி ஜவுளிச்சந்தையில், திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் சந்தைக்கு வந்து ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம். கரோனா தாக்கத்திற்குப் பிறகு, தீபாவளி காலகட்டத்தில் ஜவுளி விற்பனை அதிகரித்த நிலையில், தற்போது தொடர்மழையால் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ளதால், நேற்று முன்தினம் தொடங்கிய வாரச் சந்தைக்கு வெளிமாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, ராஜபாளையம், செங்கோட்டை, வில்லிபுத்தூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஜவுளி கொள்முதல் செய்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக மொத்த விற்பனை 40 சதவீதமும், சில்லறை விற்பனை 30 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த வியாபாரிகள், மழை தொடராமல் இருந்தால், கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால் வியாபாரம் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago