திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கபடிப் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. புதுகை மாமன்னர் கல்லூரி அணி 2-ம் இடம் பிடித்தது.
மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான மதர் தெரசா கோப்பை கபடிப் போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் லீக் மற்றும் சூப்பர் லீக் முறைப்படி கடந்த டிச.5, 6 -ம் தேதிகளில் நடைபெற்றன. இதில் 7 அணிகள் பங்கேற்றன.
சூப்பர் லீக் பிரிவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி, உருமு தனலட்சுமி கல்லூரி அணியை 30-13, புதுகை மாமன்னர் கல்லூரி அணியை 25-15, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி அணியை 24-22 ஆகிய புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து, மதர் தெரசா கோப்பையை கைப்பற்றியது.
புதுகை மாமன்னர் கல்லூரி அணி, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி அணியை 25-20, திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி அணியை 28-17 ஆகிய புள்ளிகள் கணக்கில் வென்று இரண்டாமிடம் பிடித்தது. தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி அணி, திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி அணியை 28-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாமிடம் பிடித்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் என்.சுசீந்திரன் கோப்பை, பரிசுத் தொகையை வழங்கினார். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் மஹாசிவன், கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜீமுதீன், துணைச் செயலாளர் கே.அப்துல் சமத், முதல்வர் எஸ்.இஸ்மாயில் மொஹைதீன், கவுரவ இயக்குநர் கே.என்.அப்துல்காதர், உடற்கல்வி இயக்குநர் பி.எஸ்.ஷா ஹின்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago