ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில்அதிநவீன கருவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்றுஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் வசதி தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகமும் ஒன்றாகும். தூத்துக்குடியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளதால் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்துக்கு 'டேக்பாத் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் கிட்' என்ற அதிநவீன கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி ஓரிரு நாட்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் நிறுவப்பட்டுவிடும் என மருத்து வர்கள் தெரிவித்தனர்.
ஒமைக்ரான் வைரஸில் ‘எஸ்' ஜீன் இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டேக்பாத் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் கிட் கருவி மூலம் எஸ் ஜீன் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது தெரியவரும். எஸ் ஜீன் இல்லை என தெரியவந்தால், அந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்படுவார். தொடர்ந்து அவரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நவீன கருவி சென்னையில் 5 அரசு ஆய்வகங்களிலும், கோவையில் 2 ஆய்வகங்களிலும், திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தலா ஒரு அரசு ஆய்வகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago