தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் - தங்கம், வெள்ளி வென்ற பள்ளி மாணவர்கள் : ஜோலார்பேட்டையில் சிறப்பான வரவேற்பு

By செய்திப்பிரிவு

தேசிய அளவில் நடந்த சறுக்கு (ஸ்கேட்டிங்) போட்டியில் தங்கம் வென்ற திருப்பத்தூர் மாவட்ட மாணவர்களுக்கு ஜோலார் பேட்டையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவாவில் ‘ரோலர் ரிலே ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா’ சார்பில் தேசிய அளவிலான சறுக்கு (ஸ்கேட்டிங்) போட்டிகள் டிசம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றன. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜகன்பிரபு(12) என்பவர், 12 வயதுக்குட்பட்ட பிரிவில் 500 மீட்டர் மற்றும் ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தலா ஒரு தங்கம் வென்றுள்ளார்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஹரிஹர ருத்ரன் (12) ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவர் பிரித்திஷ்(10), ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்றார். 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் திரன்பிரபு(8), 500 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார்.

4 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சித்தார்த்(4), 500 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்றார். 16 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் மாணவி காஞ்சனா(16), 500 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டத்தில் தலா ஒரு தங்கமும், ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார்.

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற திருப்பத்தூர் மாவட்ட மாணவர்களுக்கு, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட் டது. அப்போது, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்