ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் :

வாணியம்பாடி அருகே மாட்டுத் தீவனம் சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடியில் இருந்து மல்லகுண்டா செல்லும் சாலையில் உள்ள கடைகள் மற்றும் புத்துக்கோயில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற பொருட்களை தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, எஸ்.பி., உத்தர வின் பேரில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன் தலைமையில் காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவல் துறையினர் வாணியம்பாடி, புத்துக்கோயில், மல்லகுண்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புத்துக்கோயில் அடுத்த பாம்பாட்டி வட்டம் பகுதியில் உள்ள மாட்டுத் தீவனம் சேமிப்புக் கிடங்கில் சோதனை நடத்தியபோது, அங்கு 35 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாட்டுத் தீவனம் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் தென்னரசு (22) என்பவரை கைது செய்தனர்.

மேலும், குட்கா விற்பனை வழக்கில் தலைமறைவாக உள்ள தென்னரசுவின் சகோதரர் பூவரசன் (25) என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE