சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆலோசிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் எம்.மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
உதகை படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
சுற்றுலாப் பயணிகளை கவரும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உதகை திகழ்கிறது. உதகை படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டதில் 180 படகுகள் உள்ளன. கரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது சுற்றுலா துறைதான். இதனால், கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால், அவற்றை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பாதிப்புகளில் இருந்து சுற்றுலா துறை மெல்ல மீண்டு வருகிறது.
சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆன்லைன் மூலமாக முன்பதிவுகள் செய்யப்படுவதால், 2 மாதங்களில் ரூ.22 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளோம். சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 30 அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக, ஒவ்வோர் இடத்தையும் ஆய்வு செய்து வருகிறோம்.
மெக்சிகோ நாட்டில் நடந்த பலூன் திருவிழாவில் தமிழக சுற்றுலா துறை பங்கேற்றது. அதனடிப்படையில், பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்தப்பட்டது. சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பைக்காரா படகு இல்லத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கணேஷ், சுற்றுலாத் துறை மண்டல மேலாளர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago