அரசிதழில் விடுபட்ட கிராமங்களை பதிவு செய்து - எருதுவிடும் விழா நடத்த கூடுதல் நேரம் வழங்க கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் மனு :

எருதுவிடும் விழா நடத்த அரசிதழில் விடுபட்ட கிராமங்களை பதிவு செய்தும், கூடுதல் நேரம் வழங்க கோரியும், கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு நல சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அச்சங்கத்தைசேர்ந்த கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, சாமல்பட்டி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளிலிருந்து வந்த 300-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். பொங்கல் திருவிழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் எருதுவிடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு இந்நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகவும் அரிதாகிவிட்டது.

ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியபோது ஏற்கெனவே எருது விடும் திருவிழாக்கள் நடத்திய பல கிராமங்களின் பெயர்களை அரசிதழில் சேர்க்கவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எருதுவிடும் விழா நடத்தாத கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, மாவட்ட ஆட்சியர் விடுபட்ட கிராமங்களை அரசிதழில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எருது விடும் விழா காலை 11 மணி முதல் மாலை, 5 மணி வரை நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE