ஆரோவில்வாசிகள் இருபிரிவு களாக பிரிந்து சாலை பணிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட தொடங்கியுள்ளதால் சர்வதேச நகரில் பதற்றம் நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் புதுச்சேரி மாநில எல்லையில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இங்கு 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அன்னை பக்தர்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தனிப்பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் யூத் சென்டர் என்ற பெயரில் சர்வதேச நகரின் நடுவே வசித்து வருகின்றனர். சர்வதேச நகர நிர்வாகத்துக்கு கட்டுப்படாமல் சிறு, சிறு மண் வீடுகளை கட்டி வசிக்கின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக தமிழக ஆளுநர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதன் உறுப்பினர்களாக புதுச்சேரி ஆளுநர் உட்பட 8 நேர் நியமிக்கப்பட்டனர். அறக்கட்டளை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரியான ஜெயந்தி ரவி நியமிக்கப்பட்டார்.
இந்த நிர்வாகிகளின் கூட்டம் கடந்த மாதம் ஆரோவில்லில் நடந்தது. அப்போது கூட்டத்தில் ஆரோவில்லை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சில வெளிநாட்டினர் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதால் ஆரோவில்லுக்கு களங்கள் ஏற்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சமூகவிரோத செயல்களை கண்டிப்பாக தடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஆரோவில்லில் கிரீன்ரோடு என்ற பெயரில் சாலை அமைக்க ஆரோவில்வாசிகள் முடிவு செய்தனர். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள செயலாளர் ஜெயந்திரவி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை சுமார் ஒரு மணியில் சாலை அமைக்கும் இடத்தை சுற்றிலும் பாதைகள் தடை செய்யப்பட்டன. பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை அமைக்கும் பணிக்காக மரங்களை அகற்ற தொடங்கினர். அப்போது யூத் சென்டருக்கு வந்த வெளிநாட்டு ஆரோவில்வாசிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். நள்ளிரவு நேரத்தில் நடமாடுவது ஏன்? என அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பினர்.
கிரீன்ரோடு வரும் பாதையில் வெளிநாட்டினர் வசிக்கும் யூத் சென்டரும் உள்ளது. இந்த இடத்தை அகற்றப்போவதாக தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து தனிப்பிரிவாக செயல்படும் வெளிநாட்டினர் அங்கு திரண்டு, மரங்களை வெட்டாதே, மனித நேயத்தை காப்பாற்று என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோட்டக்குப்பம் டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் காலையில் பணிகளை நிறுத்திவிட்டு கிளம்பிச்சென்றனர்.
யூத் சென்டரை அகற்றி ஆரோவில் சர்வதேச நகரத்தை மத்திய அரசு அதிகாரிகள் கைப்பற்ற நினைக்கின்றனர் என தனிப்பிரிவாக செயல்படும் வெளிநாட்டினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதேநேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரோவில்வாசிகள் மாத்ரி மந்திர் எனப்படும் அமைதி கோயிலை மேம்படுத்த இதுபோன்ற பணிகளை தொடர வேண்டும் என கூட்டம் போட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆரோவில்வாசிகள் இருபிரி வாக பிரிந்து சாலை பணிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட தொடங்கியுள்ளதால் சர்வதேச நகரில் பதற்றம் நிலவுகிறது.
வானூர் வட்டத்தில் புதுச்சேரி மாநில எல்லையில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago