கல்வராயன்மலைப் பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்தக் கோரி கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தா.உதயசூரியன் மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் சங்கராபுரம் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் தா.உதயசூரியன்வந்தார். இதைக் கண்ட ஆட்சியர் அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, தன்னுடன் வந்திருந்த கல்வராயன்மலைப் பகுதி கவுன்சிலர்களுடன் இணைந்து ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "மலைவாழ் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கல்வராயன்மலைப் பகுதியில் மின் விளக்கு, ஆழ்குழாய் அமைத்தல் பணிகளுக்காக வனத்துறைக்கு ரூ.16 கோடி ஒதுக்கியிருப்பதாக அறிகிறோம். மேற்கண்ட பணிகள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சூழலில், மின் விளக்கு, ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பணிக்கு மாற்றாக மலைப் பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்த, மேற்கண்ட நிதியை ஒதுக்க வேண்டும். இதற்கு ஊரக வளர்ச்சியின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்எல்ஏ தா.உதயசூரியனிடம் கேட்டபோது, மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவிதமான சாலைப் பணியையும் மேற்கொள்ளவில்லை. அங்குள்ள மக்கள் சாலைவசதியின்றி கடும் அவதிக்கு ஆளாகிவருகின்றனர்.அதனால் வனத்துறைக்கு ஒதுக்கப்பட்டத் தொகையை ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றி சாலைப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago