வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் ஆசிரியர்கள் ஆவர். வழக்கறிஞர் களிடம் இருந்து நீதிபதிகள் நிறைய கற்றுக் கொள்கின்றனர் என சென்னை உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கங்கள் (எம்எம்பிஏ, எம்பிஎச்ஏஏ, எம்பிஏ, எம்ஏஎச்ஏஏ, டபிள்யூஏஏ) சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசியதாவது: இரு தரப்பு வாதங்களைக் கேட்டு தீர்ப்பு வழங்கினாலும், அந்த தீர்ப்பு இரு தரப்பையும் சமரசப்படுத்துவதாக இருக்காது. இருப்பினும், தீர்ப்பால் யாருக்கும் வெளிக்காயம் இருக்காது. எதிர் தரப்பை எவ்வாறு கையாள்கிறார் என்பதில்தான் நீதிபதியின் திறமை உள்ளது.
இளைய வழக்கறிஞர்கள் வளரவேண்டும் எனில் சட்ட நடைமுறைகளை கடுமையாகப் பின்பற்றும் நீதிபதிகள் முன்பு ஆஜராக வேண்டும். நீதிபதிகள் எப்படி வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரிகிறார்களோ, அவ்வாறு வழக்கறிஞர்களும் அனைத்து நீதிமன்றங்களிலும் தொழில் புரிய வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தை ஒப்பிடுகையில், உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சிறப்பாக வழக்குகளை நடத்துகின்றனர். வரும் காலங்களில் இளம் வழக்கறிஞர்களை அதிக அளவில் நீதிபதிகளாக தேர்வு செய்ய முயற்சிசெய்வோம் என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது:
நீதிபதிகளுக்கு வழக்கறிஞர்கள் தான் ஆசிரியர்கள். வழக்கறிஞர் களிடம் இருந்து தான் நீதிபதிகள் அதிகளவில் பயில்கின்றனர். நீதிபதிகள் மாணவர்கள்தான். நீதித்துறை நலனுக்காக பாடுபடு வேன். வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காத்திருக்கிறேன் என்றார்.
முன்னதாக எம்எம்பிஏ தலைவர் என்.கிருஷ்ணவேனி வரவேற்றார். எம்பிஎச்ஏஏ தலைவர் கே.எஸ்.துரைபாண்டியன், எம்ஏஎச்ஏஏ பொருளாளர் வி.ராமகிருஷ்ணன், டபிள்யூஏஏ தலைவர் ஜெ.ஆனந்த வள்ளி ஆகியோர் நீதிபதிகளை பாராட்டி பேசினர்.
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் எம்.கே.சுரேஷ், கே.பி.தியாகராஜன், செயலர்கள் என்.இளங்கோ, எஸ்.மகேந்திரபதி, ஆர்.வி.பாரிராஜன், கே.ஆர்.சிவசங்கரி உள்ளிட்டோர் பங் கேற்றனர். எம்பிஏ செயலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago