தொடர்மழை காரணமாக சந்தைக்கு காய்கறி வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், காய்கறி விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால்,காய்கறிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் உள்ளூர் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
ஓசூர் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி.பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிபிளவர், பீட்ரூட், குடைமிளகாய் உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தோட்டப்பயிர்கள் சேதமடைந்து சந்தைக்கு காய்கறி வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் விலைபலமடங்கு அதிகரித்துள்ளது. ரூ.50-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.260 வரையும், ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.90 வரையும், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100 வரையும், ஒரு கிலோ குடைமிளகாய் ரூ.120 வரையும் விற்கப்படுகிறது.
ஈரோடு காய்கறிச்சந்தைக்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. தொடர்மழையால் தற்போது வரத்து குறைவால், அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையாகிறது. இதேபோல் முருங்கைக்காய் கிலோரூ.200-க்கும், கத்தரிக்காய் ரூ.130-க்கும் விற்பனையாகிறது.
ஈரோட்டில் காய்கறிகள் விலை விவரம் (கிலோவுக்கு):
பீன்ஸ் ரூ.100, பீர்க்கங்காய், புடலங்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் தலா ரூ.80, முட்டைக்கோஸ் ரூ.50, கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.80, பட்ட அவரை ரூ.100, கருப்பு அவரை ரூ.150, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.45.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago