நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 75 பேர் டெல்லியில் இருந்து புறப்பட்டு 25 நாட்களில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று சுதந்திர தினத்தின் பெருமைகள் மற்றும் வரலாறு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பேரணி கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி டெல்லியில் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களை கடந்த தமிழகம் வந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி, நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடிக்கு வந்தது. அக்குழுவினருக்கு தூத்துக்குடி அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்னல் விவேக் குப்தா தலைமையில் வந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பொதுமக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி ராணுவ வீரர்களுக்கு அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். யங் இந்தியன் அமைப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர்கள் வழங்கினர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கின்றனர். இறுதியாக டிசம்பர் 27-ல் டெல்லியில் பேரணியை நிறைவு செய்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago