தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின்போது, மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பதில் மெத்தனம் காட்டுவதாகக்கூறி, அதிகாரிகளுக்கு விவசாயிகள் பேனா வழங்கினர்.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
இதில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ரவிச்சந்தர் தலைமையில் விவசாயிகள், ஆட்சியரிடம் அளித்த மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் நெற்பயிர்கள் அழுகின. ஆனால், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வரவில்லை. அறிவித்த இடுபொருட்களும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு நடவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நிவாரணம் தொடர்பாக, அரசு ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் மெத்தனமாக உள்ளனர்.
ஆட்சியர் வேகத்துக்கு, அதிகாரிகள் ஈடுகொடுப்பதில்லை. எனவே, உங்கள் பேனா எங்களுக்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால், விவசாயிகள் உழைத்த பணத்தில் பேனா வாங்கி கொடுக்கிறோம். அதன் மூலம் எங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து, ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு பேனாக்களை வழங்கினர். ஆனால், அதை அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததால், மேஜை மீது பேனாக்களை வைத்து விட்டு விவசாயிகள் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago