திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு - பேருந்துகளை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் : கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம் முன்பு பேருந்துகளை மறித்து கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர், செங்கம், வேட்டவலம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர். அவர்களுக்கு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் போதியளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.

இந்நிலையில் போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் தி.மலையில் இருந்து அரசு கலைக் கல்லூரிக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மலை மத்திய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் இருந்து பேருந்துகள் வெளியேறுவதை மறித்து, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “போளூரில் இருந்து ஒரு பேருந்து மட்டும்மே இயக்கப்படுகிறது. அந்த பேருந்தில் மட்டும், இலவச பேருந்து பயண அட்டை அனுமதிக்கப்படுகிறது. இதர பேருந்துகளில் அனுமதிக்கப் படவில்லை. மேலும், போளூர் – திருவண்ணாமலை இடையே உள்ள கிராம நிறுத்தங்களில் நிறுத்தப்படவில்லை.

இதனால், உரிய நேரத்துக்கு கல்லூரிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கும் மிக குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதனால், படிகளில் தொங்கிக்கொண்டு, உயிரை பணயம் வைத்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றனர்.

அவர்களிடம், போக்குவரத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அரை மணி நேரம் நடந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில், செய்யாறு அரசு கலைக் கல்லூரிக்கு செல்ல பேருந்துகளை இயக்கவில்லை எனக்கூறி, ஆரணியில் 4-வது நாளாக அரசு பேருந்துகளை வழிமறித்து, மாணவர்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்