அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டத்தில் விடுபட்டுள்ள சுமார் 800 குட்டைகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,756.88 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் என்ற பெயரில் இது நிறைவேற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே 200 மீட்டர் தள்ளி பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் உள்ள 1,045 குளம், குட்டைகளுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் மிகப்பெரிய நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தும் வகையில், அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதி களின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் தொரவலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார். பாரதிய கிஷான் சங்க மாவட்டத் தலைவரும், அத்திக்கடவு திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான எம்.வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கோவை மாவட்டம் காரமடை வரை சுமார் 800 குட்டைகள் விடுபட்டுள்ளன. இவற்றையும் இத்திட்டத்தில் இணைத்தால், அனைத்துப் பகுதி மக்களும் அத்திக்கடவு திட்டத்தில் பயன்பெறுவர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, 800 குட்டைகளுக்கும் தண்ணீர் கிடைக்க விரைவாக தனி திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago