குடிநீர் அருந்தியவர்களுக்கு உடல்நலக் குறைவு - பேரண்டூரில் 24 மணிநேர மருத்துவ முகாம் :

By செய்திப்பிரிவு

ஊத்துக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகித்த குடிநீரை அருந்தியதால், உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் உள்ள இரு குடியிருப்பு பகுதிகளில் சுமார் 900 பேர் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு தேவையான குடிநீரை, 2 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் இருந்து, பேரண்டூர் ஊராட்சி விநியோகம் செய்து வந்தது.

இந்நிலையில், வழக்கம்போல் கடந்த 3-ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில், பேரண்டூரில் உள்ள இரு குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 8 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய ஆய்வில், குடிநீரோடு, மழைநீரும், அசுத்தமான நீரும் கலந்ததால், பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்குக்கான அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் முதல், பேரண்டூர் பகுதியில் பொது சுகாதாரத் துறை சார்பில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 80 பேர் பங்கேற்புடன் 24 மணி நேர மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இம்முகாமின் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பு மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கி கண்காணித்து வருகின்றனர்.

நேற்று காலை வரை, பேரண்டூரில் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட சுமார் 65 பேரில், 18 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், இருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், பேரண்டூர் பகுதியில் இரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீர் ஏற்றுவது, பயன்படுத்துவதை தடை செய்துள்ள மாவட்ட நிர்வாகம், டிராக்டர் மூலம் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை தற்போது வழங்கி வருகிறது.

அமைச்சர் நலம் விசாரிப்பு

இந்நிலையில், வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பேரண்டூர்வாசிகளை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் சந்தித்து, பழங்கள், போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி, உடல் நலம் விசாரித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்