மூன்று மாநில எல்லையில் முகாமிட்டுள்ள யானைகள் : வேப்பனப்பள்ளி பகுதி விவசாயிகள் அச்சம்

By செய்திப்பிரிவு

மூன்று மாநில எல்லையில் உள்ள வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் 8 யானைகள் முகாமிட்டு அப்பகுதி விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகள் இரு பிரிவாக பிரிந்ததால், அவற்றை வனப்பகுதிக்கு விரட்டுவதில் வனத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலத்தின் எல்லைப் பகுதியில் வேப்பனப்பள்ளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வெளியேறும் யானைகள் கூட்டம் வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு, சுற்றுவட்டாரங்களில் உள்ள விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கு யானைகளின் வழித் தடங்களில் விளைநிலங்களின் பெருக்கமும் ஒரு காரணமாக உள்ளது.இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 15-க்கும் மேற்பட்ட யானைகள், வேப்பனப்பள்ளி கெங்கனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

இதையடுத்து, வனத்துறையினர் யானைகளை, கர்நாடகா, ஆந்திரா வனப்பகுதிகளுக்கு விரட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் கெங்கனப்பள்ளி வனப்பகுதியில் 8 யானைகள் மீண்டும் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தியது. அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியின்போது, யானைகள் இரு குழுக்களாக பிரிந்ததால், யானைகளை ஆந்திரா, கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்டுவதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து யானை களை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “ஏற்கெனவே மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது வேதனையளிக்கிறது. யானை களை விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளிவராமல் இருக்க தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்