சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் சக்கரை குளம் கிராமத்தினர் தங்கள் பகுதி குளத்துக்கு தண்ணீர் கேட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, “தொடர் மழையிலும் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் சில குளங்கள் நிரம்பாமல் உள்ளது. இந்நிலையில், கருப்பாநதி அணையில் இருந்து வரும் உபரி நீரால் வீரசிகாமணி குளம் நிரம்பியது. அங்கிருந்து மறுகால் செல்லும் நீர் மூலம் நடுவக்குறிச்சி பெரிய குளம் நிரம்பி, அதன் மறுகால் நீர் மூலம் சிங்கத்து குளம் நிரம்பியது.
அங்கிருந்து சர்க்கரை குளத்துக்கு தண்ணீர் வர வேண்டும். ஆனால், சிங்கத்து குளம் நிரம்பிய நிலையில் மண் மூட்டைகளை வைத்து அடைத்துவிட்டனர். இதனால் சர்க்கரை குளத்துக்கு தண்ணீர் வரவில்லை” என்றனர்.
சேர்ந்தமரம் போலீஸார் மற்றும் சங்கரன்கோவில் சட்டபேரவை உறுப்பினர் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சர்க்கரை குளம் நிரம்பினால் உபரி நீர் செல்ல மறுகால் வசதி இல்லை. எனவே, குளம் நிரம்பினால் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளத்தால் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்படுத்தி, குறைவான நீர் திறக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு தண்ணீர் வந்துகொண்டு உள்ளது என்று கூறினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago