வேலூர் கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் 15 அடி ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் ஓரிரு நாளில் தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள் ளன. வேலூரில் 16-ம் நூற்றாண் டில் கட்டப்பட்ட கோட்டையின் அகழியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை அகழியில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறினால் மட்டுமே ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேங்கி இருக்கும் தண்ணீர் வடிய ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. இதற்காக, கோட்டையின் வடக்கு பகுதியில் உள்ள உபரி நீர் கால்வாய் வழியாக தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்தனர். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட உபரி நீர் கால்வாய் தூர்ந்து போனதால் எத்தனை அடி ஆழத்தில் அது இருக்கிறது. அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என தெரியாமல் அதிகாரிகள் குழுவினர் திணறினர்.
உபரிநீர் கால்வாயை கண்டுபிடித்து தண்ணீரை வெளியேற்றும் பணி கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 4 அல்லது 5 அடி ஆழத்தில் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் புதிய மீன் மார்க்கெட் அருகேயுள்ள கால்வாய் பகுதியில் சுண்ணாம்பு கலவையுடன் செங்கற்களால் ஆன அரைவட்ட வடிவ கால்வாய் கட்டமைப்பு சுமார் 15 அடி ஆழம் வரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், சுமார் இரண்டரை அடி அகலம் கொண்ட கால்வாய் இருப்பதையும் உறுதி செய்தள்ளனர். தொடர்ந்து அந்த இடத்தில் நீர்க்கசிவு இருப்பதால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி அதிக அழுத்தம் கொண்ட காற்றை குழாய் வழியாக செலுத்தி கால்வாய் அடைப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. சுமார் 40 அடி தொலைவுக்கு வரை மட்டுமே அடைப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், பக்கவாட்டில் துளையிடும் போர்வெல் இயந்திரத்தின் உதவியுடன் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து அகழி வரை துளையிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘முடிந்தவரை கால்வாய் அடைப்புகளை சரி செய்துள்ளோம். அகழி பகுதியில் இருந்து பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதனால், மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து கால்வாயை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக பக்கவாட்டில் இருந்து துளையிட முடிவு செய்துள்ளோம். விரைவில் தண்ணீரை வெளியேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.
தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கோட்டை மற்றும் அகழியின் பராமரிப்பு மட்டுமே எங்கள் பணி. இதில், ஏதாவது சேதாரம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. உபரி நீர் கால்வாய் கட்டமைப்பின் மாதிரி வரைபடத்தை ஆய்வு செய்யாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த பணி நடைபெற்று வருகிறது’’ என தெரி வித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago