தமிழகத்தில் தூய்மைப் பணி யாளர்கள் ஆணையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கான மறுவாழ்வு மற்றும் நலத் திட்டப்பணிகள் தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஆட்சியர் கார்மேகம் முன்னிலை வகித்தார். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆய்வுக் கூட்டத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களின் நிலுவைச் சம்பளத்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்த தாரர்கள் தொழிலாளர்களின் பிஎப், இஎஸ்ஐ தொகையை செலுத்தவில்லை எனவும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கவில்லை எனவும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படவுள்ளது. இக்குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின் பற்றாத ஒப்பந்ததாரர்கள் மீது நட வடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தேசிய தூய்மைப் பணி யாளர்கள் ஆணையம் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நல வாரியம் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. தூய்மைப் பணி யாளர்கள் ஆணையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் சுயமாக தொழில் செய்ய குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்க மாநில அளவில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அறிந்து தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago