மதுரை வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு : ஆற்றில் இறங்க பொதுமக்களுக்கு தடை நீட்டிப்பு

மதுரை வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்க பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணையின் நீடிபிடிப்பு பகுதிகள், மூல வைகை ஆறு நீர் பிடிப்புகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதனால் பெரியாறு அணை நீர்மட்டம் 141.90 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,584 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து வைகை அணைக்கு 1867 கன அடி திறந்து விடப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 70.11 அடியாக உள்ளது. வைகை அணைக்கு பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதி மட்டுமில்லாது மூலவைகை நீர்பிடிப்பு பகுதியில் இருந்தும் 3,777 கன அடி நீர் வருகிறது. வைகை அணையில் இருந்து 3,745 கன அடி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதுதவிர வைகை ஆற்றின் வழித்தடங்களில் இணையும் சிற்றாறுகள், மழைநீர் உள்ளிட்டவை சேர்த்து தற்போது மதுரை வைகை ஆற்றில் ஒருவாரமாக தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. மழை தொடர்வதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த படியே உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது தண்ணீர் வரத்து குறைந்தாலும் தொடர்ந்து வெள்ளப் பெருக்கால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர் எச்சரித்துள்ளார்.

ஆற்றங்கரையோரம் ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. ஆற்றில் இறங்குவோரை கண்காணிக்க இரு கரையோரப் பகுதியிலும் 3 கி.மீ. தொலைவு 24 மணி நேரமும் போலீஸார் ரோந்து செல்கின்றனர்.

வைகை ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE