நெல்லையைச் சேர்ந்த தெய்வகனி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது கணவர் அண்ணாதுரை. சிஆர்பிஎப் வீரராக மகாராஷ்டிராவில் பணியாற்றினார். அங்கிருந்து சண்டிகருக்கு மாற்றப்பட்டார். விடுப்பில் ஊருக்கு வந்தவர், 29.6.2019-ல் நெல்லையில் இருந்து திருக்குறள் ரயிலில் சண்டிகருக்கு புறப்பட்டார். டெல்லி சென்றடைந்த பின்பு போனில் பேசினார். அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை. என்ன ஆனார் என தெரியவில்லை. எனவே, எனது கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பாளையங்கோட்டை சிறப்பு படை போலீஸார் டெல்லி சென்று விசாரித்தனர்.
ரயில் நிலைய சிசிடிவியில் சிஆர்பிஎப் வீரரைப் போன்றஉருவம் வந்து போவது பதிவாகியுள்ளது. அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது என கூறப்பட்டது. இதேபோல் டெல்லி போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து தேடி வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் தங்களின் உத்தரவில், சிஆர்பிஎப் வீரர் மாயமானது குறித்து தமிழ்நாடு மற்றும் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இருவரும் விசாரணையில் கிடைக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். விசாரணை விவரத்தை மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago