திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமேடு கொள்ளிடக்கரை படுகைப் பகுதியில் நாட்டிலேயே பெரிய மியாவாக்கி குறுங்காடு உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான மரக்கன்றுகள் நடும் விழா ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று 56 ஏக்கர் பரப்பளவில் 8 லட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்து குறுங்காடு உருவாக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மியாவாக்கி முறையில் பொன்னம்பாளையம், சமயபுரம், இனாம் சமயபுரம், இருங்களூர், கொணலை, பல்லபுரம், வெங்கடாசலபுரம், கல்லக்குடி, லால்குடி, ரங்கம், திருவானைக்காவல், பிச்சாண்டவர் கோவில், தச்சன்குறிச்சி, முசிறி, பகளவாடி, கரியமாணிக்கம், தாளக்குடி, திருமணமேடு ஆகிய 18 இடங்களில் 150 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமைப் பரப்பை அதிகரித்திடும் வகையில் குறுங்காடு உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் ஆக்சிஜன் தரக்கூடிய மரங்களான வேம்பு, புங்கன், மகிழம், பாதாம், அரசு உள்ளிட்ட 57 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பூமியில் வெப்பம் குறைவதுடன், சுத்தமான காற்று கிடைக்கும். பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்வதற்கான உயிர்ச்சூழல் மேம்படும் என்றார்.
இந்த மியாவாக்கி குறுங்காடு உருவாக்குவதற்கு துணைபுரிந்த டால்மியா நிறுவனத்தின் ஆலைத்தலைவர் கே.விநாயகமூர்த்தி, கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வெங்கட்ரெட்டி மற்றும் அரசுத்துறை அலுவலர்களை அமைச்சர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, நீர்வள ஆதாரத்துறை செயற் பொறியாளர் மணிமோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.கங்காதாரிணி, திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago