தூத்துக்குடியில் திடீரென நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பைபர் படகு நீரில் மூழ்கியது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் ஜென்சன். இவர், தனக்குசொந்தமான பைபர் படகில் 6 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிட்டு நேற்று அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியதாலும், ராட்சத அலைகள் எழுந்ததாலும் படகு கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
கரையில் இருந்து 180 மீட்டர் தொலைவு வரை வந்த நிலையில் திடீரென படகு தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. அதிலிருந்த மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி கரை திரும்பினர். படகில் இருந்த மீன்கள் மற்றும் படகு முழுவதும் நீரில் மூழ்கியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து படகு உரிமையாளர் ஜென்சன் கூறும்போது, ‘‘படகு திடீரென மூழ்கத் தொடங்கியதால் கரை திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்தோம். மற்ற மீனவர்கள் உதவியுடன் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தோம். படகு மூழ்கி விட்டதால் தமிழக அரசு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
திரேஸ்புரம் கடற்கரையில் படகு அணையும் தளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். கூடுதலாக படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக படகு குழாம் அமைத்து தூண்டில் வளைவு ஏற்படுத்தி தரவேண்டும்’’. என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago