விழுப்புரம்- புதுச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் - தனியார் பேருந்துகளின் அதிவேகத்திற்கு காரணம் என்ன? :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் - புதுச்சேரி வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு வதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் - புதுச்சேரி இடையே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் 20-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் விழுப்புரம், பாணாம்பட்டு சாலையில் நேற்றுமுன்தினம் இரவு புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் அர்ஜீனன் (30) உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். விழுப்புரம்-புதுச்சேரி வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிவேக பேருந்து இயக்கத்திற்கு காரணம் என்ன என்று தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் கேட்டபோது, "சுமார் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து விழுப்புரம்- புதுச்சேரி இடையே இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் பயணிகள் போதுமான அளவு பயணிக்க வேண்டும். கலெக்‌ஷன் குறைவாக கொடுத்தால் அடுத்து `டூட்டி’ கொடுக்க மாட்டார்கள். அதனால் அதிவேகமாக இயக்க வேண்டியுள்ளது.

இதனால் அடுத்து வரும் பேருந்தின் நேரத்திலேயே அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதாவது மாலை 6 மணிக்கு ஒரு பேருந்து புறப்பட வேண்டும், இதற்கு அடுத்த பேருந்துக்கு 6.10 மணிக்கு புறப்பட வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் மாலை 6 மணிக்கு பேருந்து நிலையத்தில் புறப்படும் பேருந்து, அங்கே மெதுவாக ஊர்ந்தபடியே 10 நிமிடம் கழித்தே பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும். மேலும் சென்றடைய வேண்டிய இடத்திற்கு 5 கிமீ வரை பொறுமையாக சென்று, அதன் பின் வேகமெடுத்து சென்றடையும் பேருந்து நிலையத்திற்கு செல்லும். இதனால் நகரப் பகுதிகளில் தனியார் பேருந்துகளை அதிவேகமாக ஓட்ட வேண்டியுள்ளது" என்றனர்.

போக்குவரத்து காவல்துறையினரிடம் கேட்டபோது, நகரப் பகுதிகளில் 30 கி.மீ மேல் வேகம் இருக்கக்கூடாது. ஆனால் அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஆண்டுக்கு சுமார் 5ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் விழுப்புரம் நகரில் மட்டும் ஆயிரம் வழக்குகளுக்கு அதிகமாக இருக்கும்" என்றனர்.

நாம் நம் இலக்கை அடைய அதிவேகமாக செல்வது போலத்தான் மற்றவர்களும் வருவார்கள். அவர்கள் ஏற்படுத்தும் விபத்தில் நம் குடும்பத்தார்கூட பாதிப்புக்குள்ளாகலாம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வந்தால்தான் அதிவேகத்தை குறைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்