மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட - அனைத்துப் பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

பி.அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்):

திருச்சி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த அனைத்துப் பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்களை அழிக்கும் வனவிலங்குகளை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும்.

அயிலை சிவசூரியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-இந்திய கம்யூ.சார்பு):

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு, வெங்காயம், பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம், எண்ணெய் வித்துப் பயிர்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும்.

தொடர் மழையால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

பூ.விசுவநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்):

ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் இன்றளவும் நிரம்பவில்லை. இதற்கு காரணம் வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தான். அவற்றை விரைந்து அகற்ற வேண்டும். வாய்க்கால்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் உள்ள மண்மேடுகளை அகற்ற வேண்டும்.

வீ.சிதம்பரம் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - மார்க்சிஸ்ட் சார்பு):

மணப்பாறை, மருங்காபுரி, தாத்தையங்கார்பேட்டை போன்ற இறவைப் பாசனப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. ஆனால் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததால் அவை முழுமையாக நிரம்பவில்லை.

இறந்த கால்நடைகளை பதிவு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

ம.ப.சின்னதுரை(தமிழக விவசாயிகள் சங்கம்):

தூர்வார ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக செலவிடப்படாததால், மழையால் பயிர்கள பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து முறையாக அளவீடு செய்து நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும்.

வீரசேகரன்(அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்கம்):

லால்குடி பகுதியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கவண்டம்பட்டி சுப்ரமணியன் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கம்):

கோரையாறு, அரியாறு, குடமுருட்டி ஆகிய ஆறுகளில் அதிக நீர்வரத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தைத் தடுக்க அனைத்து ஆறுகளையும் தூர் வாரி, கரைகளை உயர்த்தி, மதகு களை சீரமைக்க வேண்டும்.

இதேபோன்று ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். கூட்டத் தில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்