திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் - அனுமதியின்றி திறந்த 2 கடைகளுக்கு ‘சீல்’ : தடுக்க முயன்ற இருவர் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர். செந்திலாண்டவர் கோயில் வளாகத்தில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்க விடாமல் தடுக்க முயன்றதாக கடை வாடகைதாரர் உட்பட இருவர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தங்கத்தேர் மண்டபம் மேல்பகுதியில் மூன்றாண்டு குத்தகை அடிப்படையில் 23 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இந்த கடைகளின் குத்தகை காலமான 3 ஆண்டுகள் இந்தாண்டு ஜூன் 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஏற்கெனவே கரோனா காலத்தில் இக்கடைகள் பூட்டப்பட்டிருந்தன. பின்னர் ஜூன் 5-ம் தேதிக்கு பிறகு 23 கடைகளும் பூட்டியிருந்தன.

இதில் 7-ம் எண் மற்றும் 11-ம் எண் கடைகளை கடந்த நவம்பர் 14-ம் தேதி முதல் திறந்து வைத்து வியாபாரம் செய்தனர். அப்போது அனுமதியின்றி திறக்கப்பட்ட இந்த கடைகளுக்கு கோயில் இணை ஆணையர் (பொ) குமரதுரை தலைமையில் பணியாளர்கள் சீல் வைக்க முயன்றனர். இதனால் கடை வாடகைதாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது.

மேலும் குத்தகை முடிந்த கடைகளை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பவில்லை என வாடகைதாரரால் புகார் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்போது கடையை சீல் வைக்காமல் அதிகாரிகள் சென்றுவிட்டனர். அதன்பிறகு கடைகளை உடனடியாக காலி செய்ய வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இரு கடைகள் மட்டும் அனுமதியின்றி தொடர்ந்து இயங்கி வந்தன.

இந்நிலையில் நேற்று காலை கோயில் உதவி ஆணையர் வெங்கடேஷ் தலைமையில் அலுவலக கண்காணிப்பாளர் கோமதி மற்றும் பணியாளர்கள், வருவாய் துறையினர் அந்த கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடகைதாரர்கள் தடுக்க முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, அதிகாரிகள் 2 கடைகளையும் தகர ஷீட்டுகளால் அடைத்து சீல் வைத்தனர். சீல் வைக்க முயன்ற அதிகாரிகளை தடுத்ததாக வாடகைதாரர் உள்ளிட்ட 2 பேர் மீது கோயில் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்