நீலகிரி மாவட்டத்திலுள்ள அந்நிய களை செடிகளை கண்டறிவது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உதகை அரசு கலை அறிவியல் கல்லூரி வன விலங்கு உயிரியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்து பேசும்போது, "களை செடிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை. வன நிலங்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் 100 கற்பூர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக சோலை மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்படுகின்றன" என்றார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் மிலிந்த்பன்யன் பேசும்போது, "நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சுற்றுச்சூழலுக்கு அந்நிய களை செடிகள் அச்சுறுத்தலாக இருக்கின்றன. எனவே எவை களை செடிகள் என்று அறிந்திருக்க வேண்டும். நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில்மரங்கள், புதர் செடிகள், தாவரங்கள், புற்கள் என முக்கியமான 27 வகை களை செடிகள் அதிகளவு காணப்படுகின்றன. லண்டானா, சீகை உள்ளிட்ட களை செடிகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக உள்ளன. களை செடிகள் குறித்த மேப்பிங் வனத்துறையின் தரவுகளை சார்ந்து இருக்கிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள வாழ்விடங்களில், ஆக்கிரமிப்பு இனங்கள் பரவுவதை பட்டியலிடுவது மிகவும் கடினம். முதல் கட்டமாக பவானி, மாயாறு நிலப்பரப்பில் ஆக்கிரமிப்பு இனங்களை வரைபடமாக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
வனவிலங்கு உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன், விலங்கியல் துறை தலைவர் எபினேசர், வனவிலங்கு உயிரியல் துறை தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago