தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும் என, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நேற்றுஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் பங்கேற்று பேசும்போது, ‘‘திருப்பூர் மாநகர் பகுதியில் ஆயிரத்து 924 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். பெரும்பகுதியினர் அவுட்சோர்சிங் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள். மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் தவிர, தூய்மைக் காவலர்களும் 265 ஊராட்சிகளில் பணியாற்றி வருகின்றனர். பலர் ரூ. 3 ஆயிரத்து 600 சம்பளம் பெறுபவர்கள். திருப்பூர் மாநகராட்சியில் 2012-ம் ஆண்டு 134 பேர் பணியில் சேர்ந்தோம். 2019-ம் ஆண்டு ரூ. 17 ஆயிரம் சம்பளம் வழங்கினர். எங்களில் 8 பேர் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர். எஞ்சியவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்காமல், ரூ. 6 ஆயிரம் மட்டும் தருகின்றனர்’’ என்றனர்.
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது: அரசு ஒரு சம்பளம் சொல்லியிருந்தால், தற்காலிகமாக பணியாற்றுபவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் குறைந்த சம்பளம் வழங்குவார்கள். முன் வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்கள் எதுவும் இல்லை. அதேபோல் பிடித்தம் செய்வதாக சொல்லும் தொகையும், ஒப்பந்ததாரர் மாறிவிட்டால் கிடைக்காது. தூய்மைப் பணியாளர்கள் பயப்படத் தேவையில்லை. இது போன்ற பிரச்சினைகளை களைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்ததாரர்கள் ஈரோடு மாநகராட்சியில் வழங்குவது போன்று, இஎஸ்ஐ, முன் வைப்பு நிதி தொடர்பான ரசீதை மாதந்தோறும் வழங்க வேண்டும். அனைவருக்கும் வங்கியில் பணம் செலுத்தும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். கையில் பணம் தரக்கூடாது. இவ்வாறு வெங்கடேசன் பேசினார்.
இதையடுத்து செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, ‘‘முறைகேடுகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து. ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். தூய்மைப் பணியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை அறிய, நீதிபதி தலைமையில் குழு அமைக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். தமிழகம்முழுவதும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் முறையை ஒழிக்கவேண்டும். லாபம் ஈட்டக்கூடிய தூய்மைப் பணியை அரசே நடத்த வேண்டும். அதேபோல் தமிழகத்தில், தூய்மைப் பணி ஆணையம் அமைக்க வேண்டும். காங்கயம் நகராட்சி முன்னாள் ஆணையர் மீது, பெண் தூய்மைப்பணியாளர்கள் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகம்முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்த முன் களப் பணியாளர்களுக்கு உரிய, நிவாரணத்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago