கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டி நாயனப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று, ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி பங்கேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆட்சியர் தலைமையில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் இணைந்து இல்லம் தேடி கல்வி குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் ஆட்சியர் பேசியது:
கரோனாவால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய தன்னார் வலர்களுடன் இணைந்து தினமும் மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக, 1,300 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடன் இணைந்து தன்னார்வலர்கள் மாலை நேர கற்பித்தல் நிகழ்வுகளில் ஈடுபட தயாராக உள்ளனர். இல்லம் தேடி கல்வி மையம் மாணவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகில் அரசு சார்ந்த கட்டிடங்களில் மட்டுமே நடைபெறும். இத்திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,054 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் நாராயணா, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன், வட்டாரக் கல்வி அலுவலர் வேதா, ஊராட்சித் தலைவர் மஞ்சுளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago